அல் – அக்ஸா நடவடிக்கை போன்ற மற்றொரு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆட்சி கவிழும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) தலைமை தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“48 மணி நேரத்தில் உலக புவியியல் அரசியலில் இருந்து இஸ்ரேல் அகற்றப்படும்” என்றும் மேஜர் ஜெனரல் சலாமி கூறியுள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ஒரு வேதனையான சூழ்நிலையில் இருப்பதாக சலாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட போர் அச்சுறுத்தலையும் வெளியிட்டுள்ளார்.
ஈரான் இன்டர்நேஷனல் அறிக்கையின்படி, “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய குடியரசின் மகத்துவத்திற்கு சவால் விடும் எவருக்கும் எதிராக நாங்கள் போராடுகிறோம்” என்று அவர் கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.
ஈரான் நிதி ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் ஹமாஸுக்கு நீண்டகால ஆதரவாளராக இருந்து வருகிறது.
ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போரின் தொடக்கத்திலிருந்து, ஈரான் அதன் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் தூண்டுதலுக்கு அப்பால் நேரடியாக மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகிறது.
அத்துடன், இஸ்ரேலுடனான உறவை துண்டிக்குமாறு முஸ்லிம் நாடுகளையும் ஈரான் வலியுறுத்தி வருகின்றது.
கடந்த மாதம், ஈரானின் அரச தலைவர் அலி கமேனி, இஸ்ரேலுடன் அரசியல் உறவுகளைக் கொண்டுள்ள முஸ்லிம் நாடுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்புகளை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.