காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக நீடித்து வரும் இஸ்ரேல்-பலஸ்தீன போர் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் உக்கிர தாக்குதல்களால் காஸாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தப்போது முதல் தெற்கு காஸாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் போர் விமானங்கள் இரவு, பகல் பாராமல் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
இந்த சூழலில் தெற்கு காஸாவின் ரபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியது.
இதில் அந்த குடியிருப்பு தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் 2 வாரங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை, அந்த குழந்தையின் 2 வயது அண்ணன் உள்பட 27 பேர் பலியாகினர்.
மேலும் அந்த குழந்தைகளின் தாய், தந்தை மற்றும் பாட்டி உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளதுடன், அதில் 8,000 குழந்தைகள் மற்றும் 6,200 பெண்கள் அடங்குவர் என்றும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.