யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகின்ற வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் (26.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணிகளின் விடுவிப்பு தொடர்பில் காணப்படும் 11 கட்டங்களில் 4 கட்டங்களே பூர்த்தியாகியுள்ளன.
ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு அவை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை உண்டு.
மேலும், உயர் பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். முடிந்த வரையில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வரும் வேளையில் அவர் காணிகளை விடுவிப்பார். அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை காட்டுவார்.
வடக்கில் எமது மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன். அதனால் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு செல்லவில்லை.