குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தை சேர்ந்த எஞ்சல் சக்ரா என்ற 3 வயது குழந்தை 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
8 மணி நேர நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு சுயநினைவற்ற நிலையில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை ஜாம் கம்பாலியாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், மூச்சுத்திணறல்தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்றும், ஆனால் சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.