புனித மிக்கேல் கல்லூரியை அக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை சூரிய மின்சார சக்தியில் செயற்படுகின்ற கல்லூரியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு பாரிய வெற்றியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆரம்பமாகி 150 வருடங்கள் நிறைவை முன்னிட்டு கனடாவில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் சுமார் 3.2 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பெறுபேறினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதன் ஊடாக, கிழக்கு மாகாணத்தில் சூரிய மின்சாரத்தில் செயற்படுகின்ற முதலாவது பாடசாலை என்கின்ற பெருமையை புனித மிக்கேல் கல்லூரி பெறுகின்றது.
இது சம்மந்தமாக புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் தலைவர் பிரசாட் ஜீவரெட்னத்தை தொடர்புகொண்டு கேட்பொழுது, ‘கல்லூரியின் 150 வருட நிறைவின் ஞாபகமாக இந்தப் பணியை நாம் செய்ததாகவும், இதனால் வருடம் ஒன்றுக்கு சுமார் 9 இலட்சம் ரூபாயை கல்லூரி சேமிக்கக்கூடியதாக இருக்கும்’ என்றும் தெரிவித்தார்.
கிழக்கில் மேலும் பல பின்தங்கிய பாடசாலைகளுக்கும் தமது பழைய மாணவர் சங்கம் இதுபோன்ற சூரிய சக்தியில் மின்சாரம் பெறக்கூடிய வசதிகளை எதிர்காலத்தில் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, தமது செயற்பாடுகளுக்குத் தேவையான நிதிப்பங்களிப்பினைச் செய்த பழைய மாணவர்களுக்கும், தமது இந்தப் பணிக்கு பல வழிகளிலும் உற்சாகம் வழயங்கியவர்களும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.