பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்குரிய தீர்மானத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று நாடளாவிய ரீதியில் வியாபித்து, மக்கள் துன்பங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 227 சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசியலமைப்பிற்கு முரணாக காணப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால் வாகன இறக்குமதிக்கான நிதியை அரசாங்கத்தின் கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடுமாறு குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக வௌியிடப்பட்டுள்ள கடன் தவணைக்கான ஆவணம், வரிச்சலுகை ஆகியவற்றை இலங்கை வங்கியால் வழங்கப்பட்டமை சட்ட விரோதமானது எனவும் உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை, இலங்கை வங்கி, சுங்கப் பணிப்பாளர் நாயகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உள்ளிட்ட 31 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.