இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் தேவையினை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி விரைவாக அதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சரிடம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளையும் நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், மனோ கணேசன் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து, சாந்தன் இலங்கை வந்து தன் வயதான தாயாரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரட்னாயக்கவுக்கு இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.