யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கடற்றொழிலில் ஈடுபடுவதற்காக கடலுக்கு சென்ற தொழிலாளர்கள் இன்று (22.02.2024) காலை இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த இரும்பாலான மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு கடற்றொழிலாளர்களின் கரைக்கு கொண்டு வரும் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் நடவடிக்கையில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு, தற்போது கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் காணப்படவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.