ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டங்களில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணிக்குள் ஏற்பட்டிருந்த முறுகல்நிலை எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்ட பின்னர் விடுக்கப்பட்ட அறிக்கை மற்றும் அறிவிப்புகளால் வெளிச்சத்துக்கு வந்தன.
எரிபொருட்களின் விலை உயர்வுக்கான பொறுப்பையேற்று வலுசக்தி அமைச்சர் கம்மன்பில பதவி துறக்கவேண்டும் என மொட்டுகட்சியிலுள்ள பஸிலின் சகாக்கள் வலியுறுத்திவருகின்றனர். பஸிலின் ஆசியுடன்தான் சாகர காரியவசம் காரசரமானதொரு அறிக்கையையும் விடுத்திருந்தார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இவ்வறிக்கையால் கொதிப்படைந்த கம்மன்பில சாகரவுக்கு பதிலடி கொடுத்தார். பகிரங்க விவாதத்துக்கும் அழைத்தார். சாகரவுக்கு ஆதரவாக மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்கும் பங்காளிகட்சிகள் அணிதிரண்டன. எனினும், பஸிலின் சகாக்கள் பின்வாங்கவில்லை. கம்மன்பில பதவி துறக்கவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளனர்.
அத்துடன் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் பற்றியும், எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
மறுநாள் ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டம் காரசரமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு முடிவு கட்டப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.