Home இலங்கை கம்மன்பிலவிற்கு எதிராக அணி திரளும் எட்டு தமிழ் கட்சிகள்

கம்மன்பிலவிற்கு எதிராக அணி திரளும் எட்டு தமிழ் கட்சிகள்

by Jey

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ்க்கட்சிகள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி மற்றும் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன பிரேரணையை ஆதரிக்க ஏற்கனவே முடிவெடுத்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளின் உத்தியோகப்பூர்வ முடிவு இன்னும் வெளியாகவில்லை என்றபோதிலும் ஆதரித்து வாக்களிக்கும் தீர்மானமே நாளை (22) நடைபெறும் அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.

அதேபோல கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான மக்கள் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியனவும் ஆதரவு நிலைப்பாட்டையே எடுக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சிலவேளை வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டால்கூட எதிர்த்து வாக்களிக்கும் நிலைப்பாட்டில் மேற்படி கட்சிகள் இல்லை.

அதேவேளை, ஆளுங்கூட்டணியிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. மற்றும் பிள்ளையானின் கட்சி வலுசக்தி அமைச்சருக்கு எதிரான பிரேரணையையை எதிர்க்கவுள்ளன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன பங்காளிக்கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. எனினும், 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஹக்கீம், ரிஷாட்டைத்தவிர மேற்படி கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் எண்ணிக்கை 15 ஆகும். இதில் தமிழ்க்கட்சிகளின் நிலைப்பாட்டை தனித்தனியாக குறிப்பிட்டிருந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியிலுள்ள மூன்று கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியில் அஙகம் வகிக்கின்றன. அதேபோல இ.தொ.கா. மொட்டு கட்சியில் அங்கம் வகிக்கின்றது.

 

related posts