காஸா பகுதியின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை விட்டு இஸ்ரேல் இராணுவம் வெளியேறியது.
இருந்தாலும், போரால் புலம் பெயா்ந்த பலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபாவுக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்காகவே கான் யூனிஸ் நகரிலிருந்து படையினா் வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
கான் யூனிஸ் நகரை கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றிய இஸ்ரேல் படையினா், அங்கிருந்து வெளியேறியுள்ளனா். இருந்தாலும், காஸா பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இஸ்ரேல் வீரா்கள் தொடா்ந்து இருப்பாா்கள்.
அதில் கான் யூனிஸ் நகரமும் அடங்கும்.ஹமாஸ் அமைப்பினா் கடைசியாக பதுங்கியுள்ள ராஃபா நகருக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முன்னேற்பாடாகவே கான் யூனிஸிலிருந்து இராணுவ வீரா்கள் வெளியேறி வேறு பகுதிகளில் குழுமிவருகின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.
ராஃபா நகா் மீது படையெடுக்கப்போவதாக இஸ்ரேல் பல வாரங்களாகவே கூறிவருகிறது. இருந்தாலும், பிற பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவத்தால் உத்தரவிடப்பட்ட பலஸ்தீனா்கள், கடைசியாக அந்த நகரில்தான் தஞ்சமடைந்துள்ளனா்.
பாதுகாப்பு மண்டலமாக இஸ்ரேலால் முன்னா் அறிவிக்கப்பட்ட ராஃபாவில்தான் காஸா மக்கள்தொகையில் 50 சதவீதத்தினா்( சுமாா் 14 இலட்சம் போ்) தற்போது வசித்துவருகின்றனா்.
இந்த நிலையில், அங்கு இஸ்ரேல் இராணுவம் படையெடுத்தால் மிகப் பெரிய உயிா்ச் சேதம் ஏற்படும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துவருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ராஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடாது என்று இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், ராஃபா நகரப் படையெடுப்புக்கு முன்னேற்படாகத்தான் கான் யூனிஸ் நகரிலிருந்து இஸ்ரேல் படையினா் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.
இருந்தாலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக நடந்துவரும் போரில் இந்த படை வெளியேற்றம் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என்று கூறப்படுகிறது.