பிரதமர் மோடி தமிழ் மீது பாசம் உள்ளவர் போல திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் எழுதி வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார் என திருப்பூரில் நடைபெற்ற பரப்பரை கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் காந்திநகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வைகோ பேசியதாவது,
“திராவிட இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்தது திருப்பூர். சுப்பராயன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
தமிழ்நாட்டை பாதுகாக்கவும், இந்தியாவை பாதுகாக்கவும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
மூன்று முறை வெள்ளம் வந்து தமிழ்நாடு மிதந்த போதும், கொரோனாவால் பல்லாயிரம் உயிர்கள் இழந்த போதும் வராத பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக தமிழ்நாட்டிற்கு 9 முறை வந்துவிட்டார்.
அவர் 9 முறையல்ல 90 முறை வந்தாலும் பாஜக தோல்வியடைவதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி கண்ணியமாக பேச வேண்டும். மாறாக தமிழக மக்கள் புண்படும் வகையில் பேசி வருகிறார். நடுநிலையாக பேசாமல் கடுமையாக பேசி வருகிறார்.
திராவிட இயக்கத்தை அழிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அவர் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்து நாடகம் ஆடி வருகிறார்.
தமிழ் மீது பாசம் உள்ளவர் போல திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் எழுதி வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார். தமிழர்களை ஏமாற்ற முடியாது. தமிழ் மீது உண்மையிலேயே பற்று இருப்பவரானால் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா?.
தமிழர், வளம், இனம், பண்பாட்டை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு வைகோ தெரிவித்தார்.