இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணைக்குழு நாடுகள் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றிய கனடா, ஜெர்மனி, வடக்கு மெசிடோனியா, மாலாவி, மொன்டன்கிரோ மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடங்கிய இணைக்குழு இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலமாக இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தும் விதம் தொடர்பிலும், கைதுகள் தடுத்து வைப்புக்கள் தொடர்பிலும் கசரினை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46ஃ1 தீர்மானத்தின் பிரகாரம் மனித உரிமைகளை பேணுவதில் இலங்கை சிரத்தை எடுத்துக் கொள்வதாக தென்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுபான்மை மதச் சமூகத்தினரின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ப்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான நியமனங்கள் தொடர்பிலும் கரிசனை கொண்டுள்ளதாகவும் சுயாதீனமானவர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.