காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாட்களுக்குப் பின்னர் இன்று முதல் மீண்டும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கு வருகின்ற 26-ம் தேதி நடைபெறுகிறது. இதனால், அப்பகுதிகளில் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் 3 நாட்களாக ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,
“மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி ஏப்ரல் 24-ம் தேதி தொடங்க உள்ளார். அங்குள்ள அமராவதி தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும், சோலாபூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பிற்பகல் 3.30 மணிக்கும் அவர் பேச உள்ளார் “
இவ்வாறு அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.