இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ எனும் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் அதீத கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது.
‘கள்ளக்கடல்’ நிகழ்வு என்பது எவ்வித அறிகுறிகளும் இன்றி திடீரென கடல் சீற்றம் அடைவது. சற்று எதிர்பாராத தருணத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்பதால் கேரளாவில் இதனை, ’கள்ளக்கடல்’ நிகழ்வு என அழைக்கின்றனர்.
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும், எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவே இப்படி ‘கள்ளக்கடல்’ நிகழ்வு உருவாகக் காரணமாகும்.
இந்நிலையில் இன்றும் (மே 4) நாளையும் (மே 5) இந்த கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது.