தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே. 16) நடைபெற்றது.
இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் முருகாநந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
குறிப்பாக, சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல வகை போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.