ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகேயுள்ள ஆற்றில் நான்கு இந்திய மாணவர்கள் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நால்வரில் ஒருவரின் உடலை அதிகாரிகள் மீட்டுள்ளதோடு ஏனையவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆற்றில் விழுந்த மாணவி ஒருவர் மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள துணைத் தூதரகம் ஆகியவை உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து குறித்த மாணவர்களின் உடல்களை மீட்டு இந்தியாவுக்கு விரைவில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இதுதொடர்பில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். மேலும் மீட்கப்பட்ட மாணவிக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன”
மேற்குறித்த மாணவர்கள், வெலிகி நோவ்கோரோட் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் காப்பாற்றப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நீரில் மூழ்கியதற்கான காரணம் அல்லது உயிரிழந்தவர்களின் அடையாளம் குறித்த விபரங்கள் அதிகாரிகளினால் இன்னும் வெளியிடப்படவில்லை.