Home உலகம் சவூதி அரேபியாவில் குவிந்துள்ள வெளிநாட்டு யாத்ரீகர்கள்

சவூதி அரேபியாவில் குவிந்துள்ள வெளிநாட்டு யாத்ரீகர்கள்

by Jey

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவில் குவிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.

மேலும் இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது. ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து இதுவரை 15 லட்சம் பேர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு 18 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர். அதைவிட இந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின்ஹமாஸ் அமைப்புக்கு இடையே 8 மாதங்களாக நீடித்து வரும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள முடியவில்லை. அதேவேளையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் இருந்து 4,200 பாலஸ்தீனியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

related posts