Home இந்தியா தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – ஹிந்து முன்னணி

தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – ஹிந்து முன்னணி

by Jey

”தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பயங்கரவாதிகள், நக்சலைட்கள் நடமாட்டம் அதிகமாகி விட்டது,” என, ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ., நுாற்றாண்டு மண்டபத்தில், நக்சல் நிர்வாகிகளோடு தொடர்புடைய சிலர், பெரியாரிசம் மாநாடு நடத்தினர்.

 

வனப்பகுதிகளில் முகாம்

 

அந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர், நக்சல்களோடு தொடர்புடைய, தேனி மாவட்ட பெண். கேரள போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த நக்சல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் உடலை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆனால், இந்த தேனி பெண் முன்வந்து, நக்சல் உடலை வாங்கி அடக்கம் செய்தார். இந்த பெரியாரிச கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் ஜவாஹிருல்லா, திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தற்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று பேசினார். இதன்பின், தமிழகத்தில் நக்சல்கள் தைரியமாக நடமாட துவங்கியுள்ளனர்.

* தமிழக — கேரள எல்லையில், தீவிரவாத பயிற்சி முகாம் நடப்பதாக தகவல் வந்தது. தமிழகம் மற்றும் கேரள போலீசார் தனித் தனியாக விசாரணை நடத்தினர். இதில், தென்காசி மாவட்ட வனப் பகுதிகளில் முகாம் நடந்தது தெரிய வந்தது. வாகன சோதனையில், கொல்லம் வனப் பகுதிகளில் நடந்த முகாம்களில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தாங்கள் பயங்கரவாத குழுக்களோடு தொடர்புடையவர்கள் என்பதை, அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

* இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து, பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 14 பேர், ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருக்கும் மரைக்காயர்பட்டினம் கடல் பகுதிக்கு, கள்ளத் தோணியில் வந்தனர். பின், தமிழகத்தின் பல பகுதிகளில் சுற்றி விட்டு, கேரளா வழியாக மங்களூருக்கு சென்றனர். மங்களூரு போலீசார், அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்

* மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில், ராணுவ முகாம் உள்ளது. அங்குள்ள அலுவலகத்துக்கு, ராணுவ அதிகாரிகள் பேசுவது போல ஒரு போன் கால் வந்துள்ளது. சந்தேகம்கொண்ட ராணுவத்தினர் விசாரித்துள்ளனர்.

 

மூவரும் கைது

பயங்கரவாத குழுக்களோடு தொடர்புடைய, பெங்களூரு நபர் பேசியது கண்டறியப்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது, துாத்துக்குடியைச் சேர்ந்த மூவர், அவரோடு தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. அந்த மூவர் தான், போலி ஆவணங்கள் வாயிலாக, ‘சிம் கார்டு’களை வாங்கி, பெங்களூரு நபருக்கு கொடுத்துள்ளனர். உடனே, மூவரும் கைது செய்யப்பட்டனர்

*திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில், சங்கர் சிமென்ட் தொழிற்சாலை உள்ளது. அங்கு, போன் மூலம் வந்த தகவலை தொடர்ந்து சோதனை நடத்திய போது, ‘பைப்’ வெடிகுண்டு மற்றும் அதை இயக்கும், ‘ரிமோட்’ ஆகியவை கிடைத்தன. இதற்கு காரணமான, துாத்துக்குடியைச் சேர்ந்த சலீம் என்பவரை, போலீசார் கைது செய்தனர். பணம் பறிப்பதற்காக, பைப் வெடிகுண்டு வைத்து மிரட்டியதாக சலீம் கூறியுள்ளார்.

ஆனால், பைப் வெடிகுண்டு மற்றும் ரிமோட் போன்றவற்றை, பயங்கரவாத குழுக்கள் தான் பயன்படுத்துவது வழக்கம். இந்த சம்பவங்கள், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் நடந்தவை என்பதால், சந்தேகம் வருகிறது. தமிழகம், பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் புகலிடமாக மாறும் ஆபத்து உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

தீவிர கண்காணிப்பு!

தமிழக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:போலீசார் தினந்தோறும் திரட்டும் தகவல்களை வைத்து, தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கிறோம். அந்த நடவடிக்கைகளை கூறியே, ஹிந்து முன்னணியினர் அச்சத்தை கிளப்புகின்றனர். ஆட்சி மாறியதும், இப்படி நடப்பதாக தவறான புரிதலில் பேசுகின்றனர். எல்லா காலங்களிலும், போலீஸ் தன் கடமையை தெளிவாக செய்து வருகிறது. தமிழக எல்லைகள், பயங்கரவாதிகளுக்கு திறந்து விடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

related posts