ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ள “ஒன்றாக வெல்வோம்“ என்ற தொனிப்பொருளின் கீழ் காலி நகரில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் , அதனை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஜனாதிபதி இது தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு முன்னதாக ஜனாதிபதி தனது அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் , பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிப்பது தொடர்பில் மக்கள் இருமுறை சிந்திக்க மாட்டார்கள் என தாம் நம்புவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.