எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
தனது கட்சி மற்றும் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் தனது இந்த முடிவை ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பதவிக்காலம் முடிவடையும் வரை ஜனாதிபதியாக தனது பொறுப்பில் இருப்பேன் என்றும் அவரட தெரிவித்துள்ளார்.
“உங்கள் ஜனாதிபதியாக பணியாற்றுவது எனது வாழ்நாளின் மிகப்பெரிய கௌரவம்.
“மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கமாக இருந்தாலும், கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலக முடிவுசெய்துள்ளேன்.
எஞ்சியிருக்கும் எனது பதவிக் காலத்திற்கான பொறுப்புகளை நிறைவேற்ற முடியும் என நான் நம்புகிறேன்” என ஜோ பைடன் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியுள்ள ஜோ பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, விரைவில் கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க மக்களுக்கும் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ள பைடன், தனது முடிவு தொடர்பாக விரிவாக நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.