பத்தாவது நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்களை நேரடியாகவும் 29 உறுப்பினர்களை தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்வதற்காக இன்று வியாழக்கிழமை அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 65 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
என்றாலும், இத்தேர்தலில் வாக்காளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை போன்று வாக்களிப்பில் பெரிதும் ஆர்வம் காட்டாததால் மந்தமான தேர்தலாகவே இடம்பெற்றது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75.89 வீதமான வாக்குப் பதிவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 79.46 வீதமான வாக்குப் பதிவும் இடம்பெற்றிருந்த போதிலும் இம்முறை அண்ணளவாக 65 வீதமான வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்தது.
2023ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடைபெற்ற இத்தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 71இலட்சத்து 40ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 160 தொகுதிகளில் 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்ததுடன், இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் வாக்களிப்பு நடைபெற்றது.
இம்முறை வாக்களிப்பு மிகவும் மந்தமான முறையில் இடம்பெற்றதுடன், மக்கள் வாக்களிப்பில் பெரிதும் ஆர்வம் காட்டியிருக்கவில்லை.
அதன் காரணமாக 65 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரவல் அமைப்பு தெரிவித்தது.
ஆனால், இலங்கை வரலாற்றில் பாரதூரமான அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தலாக இது அமைந்துள்ளதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.