Home இந்தியா இந்தியா செல்ல உள்ளார் – அநுர

இந்தியா செல்ல உள்ளார் – அநுர

by Jey

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு தனது முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதிகள் தமது முதலாவது உத்தியோகப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது பல தசாப்தங்களாக பின்பற்றும் மரபாக காணப்படுகிறது.

இந்தியா இலங்கையின் அண்டை நாடு என்பதற்கு அப்பால் பல நூற்றாண்டு காலமாக கலாசார உறவுகளை பேணுவதுடன், வணிக நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

வரலாற்று ரீதியான இந்த பிணைப்பின் காரணமாக கடந்த நூற்றாண்டில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் ஆழமானது. அதன் காரணமாகவே இலங்கையின் அரச தலைவர்கள் தமது முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டு இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துகின்றனர்.

இந்த மரபு வழியை ஜனாதிபதி அநுரவும் பின்பற்ற விரும்புகிறார். அதன் காரணமாவே அவர் தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள உள்ளார்.

அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியே முதலாவது வாழ்த்தையும் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இலங்கைக்கு முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வந்ததுடன், அநுரவை புதுடில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அநுர, பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியா வருவதாக ஜெய்சங்கரிடம் உறுதியளித்தார். இந்தப் பின்புலத்தில்தான் அநுர எதிர்வரும் டிசம்பர் நடுபகுதியில் இந்தியா செல்ல உள்ளார்.

இதனை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

related posts