தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சிகளை வீழ்த்த வேண்டும். 40 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து, அவர்களால் தான் எல்லா நிலைகளிலும், தமிழகம் வீழ்ந்துள்ளது. மொத்தத்தில், தமிழகத்தை படு குழியில் தள்ளியவர்கள், திராவிட இயக்கங்கள் தான்.
அவர்களுக்கு மாற்றாக, தமிழ் தேச சிந்தனையுடன், நாம் தமிழர் இயக்கம் செயல்படுகிறது. நாம் தமிழர் இயக்கம் என்று ஆட்சி பொறுப்புக்கு வருகிறதோ, அன்று தான் தமிழகத்துக்கு விமோசனம் கிடைக்கும்’- இப்படி மேடைகள் தோறும், தமிழகம் முழுதும் தொடர்ந்து முழங்கி வருபவர், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை தனித்து எதிர்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சி, தன் ஓட்டு வங்கியை மெல்ல உயர்த்தி வருகிறது. சமீபத்திய சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தி, 6.85 சதவீத ஓட்டுக்களை பெற்றுள்ளது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி மாறி, தி.மு.க., ஆட்சி வந்துள்ளது. சீமான், தி.மு.க., ஆட்சியை விமர்சிப்பாரா என, பலரும் எதிர்பார்த்தனர்.
இந்த சூழலில் தான், அவரது தந்தை செந்தமிழன் காலமானார். அதற்கு துக்கம் விசாரித்து, முதல்வர் ஸ்டாலின் போனில் பேசினார். உடனே, நெகிழ்ந்து போன சீமான், தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 15வது நாளில், கொரோனா நிதி கொடுக்கும் சாக்கில், கோட்டைக்கு சென்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போதில் இருந்து, தி.மு.க., ஆட்சியை, சில நாட்களுக்கு பாராட்டி மகிழ்ந்தார்.’நேற்று வரை திட்டி தீர்த்த நீங்கள், திடீரென இப்படி மாறிப் போனீர்களே?’ என, பத்திரிகையாளர்கள் கேட்டதும், ‘என் தந்தை காலமானதும், துயரத்தில் பங்கெடுத்து, எனக்கு ஆறுதல் தெரிவித்து போன் செய்த பெரிய மனிதர், முதல்வர் ஸ்டாலின்.
‘அவரது அரவணைப்பிலும், ஆறுதலிலும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அதோடு, உண்மையிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட, பல விஷயங்களிலும் ஆட்சி சிறப்பாக நடக்கிறது’ என, விளக்கம் கொடுத்தார்.இதை, அவரது கட்சியினர் ஏற்கவில்லை. தமிழ் தேச உணர்வாளர்களும் அதை ஏற்காமல், சமூக வலைதளங்களில் கடுமையாக கண்டித்தனர். இப்படி நாலாபுறமும், சீமானுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்ந்தன. இந்நிலையில், தி.மு.க., அரசை பழையபடியே கடுமையாக விமர்சிக்க துவங்கி இருக்கிறார், சீமான்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமிகொடுத்துள்ள புகார் மீது, அரசு நடவடிக்கை எடுக்க போகிறது; அப்போது, அரசின் நடவடிக்கைகளை விமர்சித்ததால், காழ்ப்புணர்ச்சியில், பொய் புகாரில், என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சொல்லி, புகாரின் உண்மை தன்மையை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று திட்டமிட்டு, தமிழக அரசை தாக்க துவங்கி உள்ளார் என, ஒரு தரப்பினர் காரணம் கூறுகின்றனர்.
அதெல்லாம் இல்லை. விரைவில், உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. தமிழக அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா அடித்து விட்டு, தேர்தல் நெருக்கத்தில், ஆட்சியாளர்களை விமர்சித்து களத்துக்கு சென்றால், மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள். இதை அறிந்து தான், தமிழக அரசை விமர்சனம் செய்கிறார் என, வேறு சிலர் காரணம் கூறுகின்றனர்.
இது குறித்து, நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சீமான் உணர்ச்சிவசப்பட கூடியவர். தந்தை மரணத்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதும் நெகிழ்ந்து போனார். இதற்கு, கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியதுஅதோடு, ராஜிவ் கொலையாளிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ்தேச பிரச்னையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வில்லை என, ஈழ தமிழர் ஆதரவாளர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.
அவர்களின் ஓட்டுக்களை பெற்று வரும் சீமான், அந்த ஓட்டு வங்கிக்கு பிரச்னை வருமோ என, அச்சப்பட துவங்கினார்.அத்துடன், அரசை ஆதரிக்கும் மனநிலை, உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ எனவும், பதற்றம் கொள்ள துவங்கினார். அதையடுத்தே, தமிழக அரசை விமர்சிக்க துவங்கி விட்டார். இதற்குமுன், முதல்வராக இருந்த பழனிசாமியை பார்த்து, கோரிக்கை மனு கொடுத்து விட்டு வந்த சில நாட்களில், அ.தி.மு.க., அரசை, சீமான் கடுமையாக விமர்சித்தார். அதனால், சீமானின் எல்லா நடவடிக்கைகளிலும், அரசியல் பின்புலம் இருக்கும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.