” மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதால் ‘தேர்தல் முறைமை சீர்திருத்தம்’ என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வகளில் அரசு ஈடுபட்டுவருகின்றது. எனவே, தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கு முன்னர் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் சிறு கட்சிகளுக்கிடையிலான சந்திப்பொன்று ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அநுரகுமார தலைமையிலான ஜே.வி.பி. ஆகியன இச்சந்திப்பில் பங்கேற்றன. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறிய வருமாறு,
” தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடுவதற்கு முன்னர் சிறு கட்சிகளுக்கிடையில் பொதுவானதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய சூழ்நிலையில் அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே தேர்தல் முறைமை மறுசீரமைப்பு என்ற போர்வையில் மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கான நகர்வு இடம்பெறுகின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது.
தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுவதற்கு முன்னர் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும். அதேபோல இடம்பெறும் தேர்தல் மறுசீரமைப்பும் நீதியான முறையில் இடம்பெறவேண்டும்.” – என்றார்.