தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு, அது தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை நியமித்தது.
ஆனால், விசாரணை ஆணையம் இது நாள் வரை இடைக்கால அறிக்கை அல்லது இறுதி அறிக்கை என எதுவும் தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள் என பரிடம் விசாரணை நடந்ததாக கூறப்படும் நிலையில், இன்னும் விசாரனை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பான விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதிய இந்நிலையில், சுப்பிரமணி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். விசாரணையை விரைவில் முடித்து வைத்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இன்னும் மூன்று மாத காலத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக அரசு ஆறு வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் விசாரிக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.