இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வீராப்பு பேசினாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்வதற்கே அரசு முயற்சிக்கின்றது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜி.எஸ்.பி .பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே பொருளாதார நிபுணரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இராணுவத்தினரைக் காட்டிக்கொடுத்து, பயங்கரவாத சந்தேக நபர்களை விடுதலை செய்தே கடந்த அரசு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றது எனவும், தாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம், கிடைத்தால் கிடைக்கட்டும், இல்லாவிட்டால் பரவாயில்லை எனவும் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மறுபுறத்தில் ஐரோப்பியக்குழு இலங்கை வந்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சு நடத்தியுள்ளது. இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிவிவகார அமைச்சர் வழங்கியுள்ளார். எவ்வாறான மாற்றம் என்பது தொடர்பில் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும், இதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொசன் போயா தினத்தன்று எல்.ரீ.ரீ. சந்தேக நபர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டனர். எனவே, அஜித் நிவாட் கப்ரால் அரசுக்காக கதைக்கின்றாரா அல்லது அரசுக்கு எதிராக கதைக்கின்றாரா என தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளவே அரசு முயற்சிக்கின்றது.” – என்றார்.