மத்திய அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான தகவல்களுக்கு மத்தியில் ஆளுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 6, 2021) எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்தது. தற்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரான தாவர்சந்த் கெஹ்லோட், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நியமித்த எட்டு புதிய ஆளுநர்களில் ஒருவர்.
மிசோரம் ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை இப்போது கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் ஹரியானாவின் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா இப்போது திரிபுரா ஆளுநராக பணியாற்றுவார்.
திரிபுராவின் ஆளுநரான ரமேஷ் பைஸ் இடமாற்றம் செய்யப்பட்டு ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநரான பண்டாரு தத்தாத்ரயா ஹரியானா ஆளுநராகவும், மிசோரம் ஆளுநராக ஹரி பாபு கம்பம்பதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படாத நிலையில், தற்போது விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ( PM Modi) அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 8 தேதி வாக்கில் அமைச்சரவை விரிவாக்கப்படலாம். மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். விரிவாக்கத்திற்குப் பிறகு 81 அமைச்சர்கள் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பில், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு (Jyotiraditya Scindia) பதவி ஏதும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து அவர் விலகியதன் காரணமாக மத்திய பிரதேசத்தை பிஜேபி (BJP) மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.