தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனது வசிப்பிடம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஜேக்கப் ஸூமாவிற்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் கடந்த வாரத்தில் உத்தரவிட்டது.
இந்நிலையில், 79 வயதான ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையை ஆட்சேபித்து மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தாம் கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து அவர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இதனிடையே, அவர் சரணடைவதற்கு நேற்று (07) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே ஜேக்கப் ஸூமா நேற்று பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
ஜேக்கப் ஸூமா 9 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்ததுடன் 2018 ஆம் ஆண்டு கட்டாயத்தின் பேரில் இராஜினாமா செய்தார்.
தென்னாபிரிக்க வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை சிறைத்தண்டனை அனுபவித்ததில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.