தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழுவுக்கு 115 முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட 07 அரசியல் கட்சிகளின் மூலம் யோசனைகள் முவைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அந்தக் கட்சிகளுக்கு யோசனைகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த யோசனைகளை sec.pscelectionreforms2021@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செயலாளர், பாராளுமன்ற விசேட குழு, இலங்கை பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கோ அனுப்பிவைக்க முடியும்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்புகளை மேகொள்வது தொடர்பில் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் யோசனைகளை சபைக்கு சமர்ப்பித்தல் மற்றும் அந்த யோசனைகள் பற்றிய சாராம்சம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
உத்தேச மறுசீரமைப்புகள் தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார, எம். ஏ. சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.