“ புலி சந்தேக நபர்களை விடுவித்ததன்மூலம் ஜி.எஸ்.பி .பிளஸ் வரிச் சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்கு ஏதுவான சூழல் உருவாகியிருந்த நிலையில், தொழிற்சங்கத் தலைவர்களை கைதுசெய்ததன் ஊடாக அந்த வாய்ப்பு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொழிற்சங்கங்களுடன் நீதி அமைச்சர் விரைவில் பேச்சு நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க,
“ ஜுன் மாதம் நிறைவடைந்துவிட்டது. எனினும், நிதி அமைச்சின் இடைக்கால மீளாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறு முன்வைக்கப்படும்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் தெளிவுபடுத்தல் அவசியம். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் புலி சந்தேக நபர்களை விடுவித்ததன்மூலம் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் நேற்று (நேற்றுமுன்தினம்) நடைபெற்ற சம்பவத்தால் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலினை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நன்கு தெரிவும். 2016 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் நான் பேச்சு நடத்தசென்றபோது ஜோசப் ஸ்டானில் உட்பட சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். ஜி.எஸ்.பி. வலுகை வேண்டுமெனில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே, தொழிற்சங்கங்களை அழைத்து நிதி அமைச்சர் விரைவில் பேச்சு நடத்த வேண்டும். பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய குழுவொன்றும் அமைக்கப்படவேண்டும். அவ்வாறு செய்யவிட்டால் செய்த ஒரு நல்லவேளையும் பலன்தராது போய்விடும்.
அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் எவரையும் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பமுடியாது. அடிப்படை மனித உரிமையை பாதுகாத்துக்கொண்டே சட்டம் செயற்படுத்தப்படவேண்டும். பிசிஆர் பரிசோதனைகூட செய்யாமல்தான் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்ப முற்பட்டுள்ளனர்.” -என்றார்.