Home உலகம் தென் ஆபிரிக்காவின் முக்கிய நகரங்களில் வன்முறைகள்

தென் ஆபிரிக்காவின் முக்கிய நகரங்களில் வன்முறைகள்

by Jey

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலான வன்முறை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. வன்முறையைத் தடுப்பதற்காக துருப்புகளை முடுக்கிவிட்ட ​​தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, தென் ஆப்பிரிக்காவில் இருந்த இனவெறி காலத்துக்கு பிந்தைய சகாப்தத்தில் காணப்படாத கொடிய வன்முறை நிகழ்வுகளை இப்போது நாடு கண்டு வருகிறது என்று ஒப்புக் கொண்டார்.

தென் ஆப்பிரிக்காவின் (South Africa) முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது. 79 வயதான ஜுமாவுக்கு கடந்த மாதம் தண்டனை வழங்கப்பட்டது. அவர் பதவியில் இருந்த 9 ஆண்டு காலத்தில் நடந்த உயர் மட்ட ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியங்களை வழங்குவதற்கான அரசியலமைப்பு நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) நடந்த கலவரத்தில் கலவரக்காரர்கள் கடைகளை சூறையாடி, போலீசார் (Police Officers) மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். ஜுமாவின் சொந்த மாகாணமான குவாசுலு-நடாலிலும், நாட்டின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க் அமைந்துள்ள குடெங் மாகாணத்திலும் வணிகங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க, 2,500 துருப்புக்களை அனுப்ப இராணுவம் தயார் ஆனது.

கடந்த வாரம் ஜுமா தன்னை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததிலிருந்து துவங்கிய போராட்டங்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்களன்று (ஜூலை 12) மாலை ஒரு தேசிய உரையில், ரமபோசா இராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க கிடைக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊழியர்களின் அனைத்து விடுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். “தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படையின் தளபதி என்ற முறையில், தென்னாப்பிரிக்க போலிஸ் படையின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பாதுகாப்புப் படைப் பணியாளர்களை அனுப்ப நான் இன்று அங்கீகாரம் அளித்துள்ளேன்.” என்று அவர் கூறினார்.

சூறையாடல் சம்பவங்களை ” நாட்டின் ஜனநாயக வரலாற்றில் அரிதாகவே காணப்பட்ட ஒரு வகையான பொது வன்முறைச் செயல்” என்று வர்ணித்த ரமபோசா, குவாசுலுவில் போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்த பகுதிகளில் பல வணிக அங்காடிகளில் கொள்ளை அடித்த ஆயிரக்கணக்கான கொள்ளையர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியைக் கொடுத்தார்.

 

related posts