உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலில் விசாரணைகளை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு இருவர் மூவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரணை நிறைவு பெற்றதாகக் கூறி இந்த சம்பவத்தை காப்பட்டிற்கு அடியில் மறைத்து இல்லாது செய்ய முயற்சிக்க வேண்டாமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
உயிர்த்த
ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணையில் இன்னும் திருப்தி இல்லை எனவும் தற்போதைய விசாரணை நிலைமைகள் குறித்தும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்றைய தினம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என்பதால் இந்த விடயம் குறித்து துரிதமான விசாரணையை எதிர்பார்ப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் மறைந்திருக்கும் ரகசியங்கள் பல உள்ளன. அவை என்னவென்று முறையாக விசாரணை செய்து பார்க்க வேண்டும். அதற்காக தற்போது அரசியல் தலைமைக்கு வேண்டியபடி செயற்படக்கூடிய பொலிஸ் அரசியல் பிரிவு மற்றும் குற்ற விசாரணை திணைக்களம் அத்துடன் அரசியல் உயர்மட்டத்தில் தலையீடு செய்து இடையூறு விளைவிக்க கூடிய சட்ட ஏற்பாடு போன்றவற்றை வைத்துக்கொண்டு முறையான விசாரணையை சாத்தியப்படுத்த முடியாது என ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் அடி முடியை கண்டுபிடிக்கும் வரை ஓயப்போவதில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.