பிரேசில் (Brazil) ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, கடந்த 10 நாட்களாக விக்கல் காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். விக்கல் நிற்பதாகவே தெரியவில்லை. இதனால், பரிசோதனைக்காக போல்சனாரோ புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குடலில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக விக்கல் நிற்கவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். ஆனால், அவரது அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், 66 வயதான ஜெயிர் போல்சனாரோ (Jair Bolsonaro) தலைநகர் பிரேசிலியாவில் உள்ள ஆயுதப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளது என்றும் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரது விக்கல் பிரச்சினைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு, வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 2018 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது போல்சனாரோ வயிற்றில் குத்துப்பட்ட பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது, அந்த மருத்துவர்களிடம் அவரது சிகிச்சை குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஜெய்ர் போல்சனாரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (Twitter) கணக்கிலும் தனது மருத்துவமனையின் படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் மருத்துவமனையின் ‘படுக்கையில்’ படுத்துக் கிடப்பதைக் காணலாம்.
போல்சனாரோ மீது 2018 தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த தாக்குதலில் அவருக்கு குடலில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். சமீபத்தில் பல நிகழ்வுகளில் உரை நிகழ்த்திய போது தொடர்ந்து ஏற்பட்ட விக்கலால் சிரமத்தை எதிர்கொண்டார். ஜூலை 7 ம் தேதி வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,’ கடந்த ஐந்து நாட்களாக விக்கல் கொண்டிருந்ததால், நான் சொல்வதைக் கேட்கிறவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.