டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சத்யன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 125 வீரர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 12 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பவானி தேவி, இளவேனில் வாலறிவன், சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி ஆகிய வீராங்கனைகளும், சரத் கமல், சத்யன் ஞானசேகரன், விஷ்ணு, நேத்ரன் குமரன், ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டி உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இதில், இன்று (ஜூலை 25) நடைபெற்ற டேபிள் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சத்யன் ஞானசேகரன், ஹாங்காங் வீரர் சியுவிடம் கடுமையாக போராடி தோல்வியுற்றார். 7 கேம்கள் வரை நீடித்த இப்போட்டியில் 7-11, 11-7, 11-1, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார். மற்ற தமிழக வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளில் வீரர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டி பதக்கத்தை வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.