நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் ராபின்(வயது 29). டிரைவர். இவருடைய மனைவி மோனிஷா(24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் 3 குழந்தைகளையும் கவனிக்க முடியாததால் வர்ஷா(3) என்ற முதல் பெண் குழந்தையை மோனிஷா தனது அக்காள் பிரவீனாவின் பராமரிப்பில் விட்டு இருந்தார். மற்ற 2 குழந்தைகளை சட்டவிரோதமாக தத்து கொடுத்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது பரூக் (51) என்பவருக்கு 2 வயது பெண் குழந்தையை ரூ.25 ஆயிரத்துக்கும், சேலம் மாவட்டம் குண்டுக்கல்லூர் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி (37) என்பவருக்கு ஆண் குழந்தையை ரூ.30 ஆயிரத்துக்கும் சட்டவிரோதமாக தத்து கொடுத்திருந்தது தெரியவந்தது. வறுமை காரணமாக 2 குழந்தைகளை விற்றதை ராபின் மற்றும் மோனிஷா ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இதில் காந்தலை சேர்ந்த டிரைவர்கள் கமல் (30), பரூக் (35) ஆகியோர் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராபின், மோனிஷா, கமல், பரூக், முகமது பரூக், உமா மகேஸ்வரி ஆகிய 6 பேர் மீது சட்டவிரோதமாக குழந்தைகளை விற்றது, பணம் கொடுத்து வாங்கியது, உடந்தையாக இருந்தது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.