Home உலகம் மான் குட்டிகளை பாதுகாக்கும் சுவிஸ் அமைப்பு

மான் குட்டிகளை பாதுகாக்கும் சுவிஸ் அமைப்பு

by Jey

சுவிட்சர்லாந்தின் மான்குட்டிகளை மீட்கும் அமைப்பு இந்த ஆண்டு 2,569 குட்டி மான்களை அறுவடை இயந்திரங்களால் கொல்லப்படுவதிலிருந்து பாதுகாத்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரோன் மற்றும் தெர்மல்-இமேஜிங் (thermal-imaging) கேமராக்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இதன்மூலம் மான்குட்டிகளைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், ஆர்வமுள்ள உதவியாளர்களைக் கண்டறியவும் உதவியது.

319 தன்னார்வலர்களைக் கொண்ட சுமார் 200 மீட்புக் குழுக்கள் 16,318 ஹெக்டேர் பரப்பளவான சோளக்காடுகளிலும் விவசாய நிலங்களிலும் புல்வெளிகளிலும் சுற்றித்திரியும் மான்குட்டிகளை மீட்கும் நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

அண்மையில் பெய்த பலத்த மழைக்குப் பிறகு விவசாய நிலங்கள் அனைத்தும் ஒரேயடியாக அறுவடை செய்யப்பட்டன. இந்த அறுவடைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களால் மான்குட்டிகள் கொல்லப்படுவதிலிருந்து அவற்றை மீட்கும் நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. கடந்த வருடத்தை விட இருமடங்கு அதிக நிலப்பரப்பில் இம்முறை மீட்பு நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாக அவ்வமைப்பு கூறுகிறது.

சுவிட்சர்லாந்தில் இன்னும் அறுவடை நிலங்களை கண்காணிக்க இந்த அமைப்பு விரும்புகிறது. இதற்காக ஓகஸ்ட் 9-19 முதல் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி அதிக தன்னார்வலர்களைத் திரட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

related posts