சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.
அமெரிக்க குடியரசு கட்சியின் பார்லி., வெளியுறவு குழு பிரதிநிதி மைக் மெக்கால் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை; அது, வூஹான் வைரஸ் ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கொரோனா வைரசை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன.
இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரோனா வைரஸ், 2019, செப்., 12க்கு முன்பாகவே, வூஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான சாட்சியங்கள் உள்ளன. வூஹான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவுகளை பராமரிக்கும் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம், சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
ஆய்வகம் செயல்படத் துவங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது.இது, கொடிய கொரோனா வைரஸ் அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளது. இதுபோல பல ஆதாரங்கள் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது