சுவிட்சர்லாந்து குடியிருப்பாளர்களை கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்துவதற்கு எதிரான சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின், ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கட்டுப்பாடுகளையும் அதற்கான செலவுகளையும் எதிர்கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி போடுவதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களின் முடிவை மதிப்பதாக, ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். இருப்பினும், தனிமனித சுதந்திரம் மற்றவர்களின் சுதந்திரத்தை கெடுக்க முடியாது என்று அவர் எச்சரித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் பெரும்பான்மையான மக்கள், தடுப்பூசியை விரும்பாத சிலரால் ஏற்படும் விளைவுகளைத் தாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்டை நாடான இத்தாலி மற்றும் பிரான்சில் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாமாக்கப்பட்டுள்ளது போன்று, சுவிட்சர்லாந்தில் கட்டாயப்படுத்தப்படக்கூடாது, ஆனால் அவர்கள் அதனை ஏற்கும்படி செய்யலாம் என்று கூறினார்.
அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெறுமாறு செய்தவுடன், நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் அதில் கலந்துகொள்ள தடுப்பூசி போடப்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யலாம். அது அவர்களுடைய முடிவு, அவர்களது தொழில் சுதந்திரம் என்பதே தமது நிலைப்பாடு என்றும் சுவிஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தடுப்பூசி இலவசம். நான் தடுப்பூசி போடவில்லை என்றால், தடுப்பூசி போடப்பட்ட வரி செலுத்துவோர் எனது கொவிட் சோதனைகளுக்கு பணம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்விக்கு எனது பதில் இல்லை என்பதே என்றும் அவர் கூறினார்.