Home இந்தியா அமைதியை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் இந்தியா ஆதரிக்கும் என, ஐ.நா.,வில் இந்தியா

அமைதியை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் இந்தியா ஆதரிக்கும் என, ஐ.நா.,வில் இந்தியா

by Jey

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்த மாதம் இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நடக்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்து, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. தேசிய அளவில் பயங்கரவாத தடுப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாதிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது. உலகளவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்.

கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, அமைதி ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்த மாதம் விவாதிக்க உள்ளது. கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி, 9ம் தேதி ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாற்றுகிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தொழில்நுட்பமும், அமைதி பராமரிப்பும் என்ற தலைப்பில், 18ம் தேதி பேச உள்ளார். அடுத்த நாள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு குறித்து ஐ.நா., பொதுச் செயலரின் அறிக்கை தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்.

ஆப்கனில் சமீப காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கு கவலை அளிக்கிறது. ஆப்கன், மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறக் கூடாது; அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கு அமைதியை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டத்தையும் இந்தியா ஆதரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

related posts