திருக்குறளை தேசிய நுாலாக்க வலியுறுத்தி, அனைத்து திருக்குறளையும் ஒப்பித்த, 10 வயது, ஆப்ரகாம் ஜோஸ், 7 வயது அருனிஷ் ஷேண்டோ ஆகியோரை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்மஸ்தான் பாராட்டினார்.
மத்திய அரசு, திருக்குறளை தேசிய நுாலாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், கடலாடிதாங்கல் கிராமத்தை சேர்ந்த, ஆறுமுகம் – சுசான்னா தம்பதியரின் மகன்கள், 1330 குறள்களையும் ஒப்பித்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்,நடந்த இந்த நிகழ்வை, உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி.சந்தோஷம் துவக்கி வைத்தார்.
முதலில், ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயதுடைய ஆப்ரகாம் ஜோஸ், திருக்குறளை அதிகாரம் வாரியாக சொல்லத் துவங்கி, 33 நிமிடங்கள், 8 வினாடிகளில் அனைத்து குறள்களையும் விரைவாக சொல்லி முடித்தார்.அவரைத் தொடர்ந்து, இரண்டாம் வகுப்பு படிக்கும், 7 வயதுடைய அருனிஷ் ஷேண்டோ, திருக்குறளை ஒப்பிக்க துவங்கி, 25 நிமிடங்கள்,47 வினாடிகளில் அனைத்து குறள்களையும் ஒப்பித்தார்.
அவர்களின் திறமையை அங்கீகரித்து, ‘அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்டு’ அமைப்பின் நிறுவனர் ராஜேந்திரன், சாதனை சான்றிதழை வழங்கினர். வி.ஜி.சந்தோஷம், ௧ லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார்.பின், அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:கொரோனா ஊரடங்கு காலத்தில், மகன்களுக்கு அனைத்து திருக்குறளையும் கற்பித்த பெற்றோரை பாராட்டுகிறேன்.
திருக்குறள் ஒப்பற்ற நுால். இதில், உழைப்பு, கண்ணியம், பொறுமை, மற்றவர்களுக்கு உதவும் தன்மை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதனால் தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசு பஸ்களில் குறள்களை இடம்பெறச் செய்தார். திருக்குறளை மத்திய அரசு, தேசிய நுாலாக்க வேண்டும் என்ற, இந்த சிறுவர்களின் கோரிக்கை முக்கியமானது.இவ்வாறு அவர் பேசினார்.