COVID-19 மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம் நிறைவடையும் வரையாவது இதனை நிறுத்த வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நிறுத்தும் போது, ஒவ்வொரு நாட்டினதும் 10 வீதமான மக்களுக்காவது தடுப்பூசியை ஏற்றக்கூடியதாகவிருக்குமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளதுடன், சில நாடுகள் அந்த திட்டத்தை செயற்படுத்தியும் வருகின்றன.
இதனால் வறிய நாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பாதிக்கப்படுவதாக Tedros Adhanom Ghebreyesus எச்சரித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் நாடுகளில், தடுப்பு மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக, 1.5 வீதமானோருக்கே தடுப்பூசியை செலுத்த முடிவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது தடுப்பூசியை வழங்கும் நாடுகள், தமது தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்து, குறித்த தடுப்பு மருந்துகளை குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கு வழங்க வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus வலியுறுத்தியுள்ளார்.