ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பெரும் பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி செப்டம்பர் 11-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டன. எஞ்சிய படைகளும் இந்த மாத இறுதிக்குள் திரும்ப பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அவர்கள் கைப்பற்றி விட்டனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ‘‘படைகளை திரும்ப பெறுவதற்கான உங்களது தற்போதைய திட்டத்தில் மாற்றம் உள்ளதா?’’ என ஜோ பைடனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘இல்லை, திட்டத்தில் எந்த வித மாற்றமும் இல்லை’’ என பதிலளித்தார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசுகையில் ‘‘ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெறும் முடிவு குறித்து வருந்தவில்லை. கடந்த 20 ஆண்டுளில் 1 ட்ரில்லியன் டாலர்களை செலவழித்துள்ளோம். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்துள்ளோம். அதே சமயம் விமானம், உணவு, உபகரணங்கள், ஆப்கான் படைக்கு ஊதியம் ஆகியவற்றை அமெரிக்க தொடர்ந்து வழங்கும்’’ என கூறினார்.