ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை மீள அழைத்த தமது தீர்மானம் மிக சரியானதென ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை மீள பெறுவதற்கான சரியான தருணம் அங்கு இருக்கவில்லையென்பதை 20 ஆண்டுகளின் பின்னர் தாம் கற்றுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே அமெரிக்க படைகள் தொடர்ந்தும் அங்கிருந்ததாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
காபூலில் தாம் கண்ட சில நெருக்கடியான காட்சிகள் மிகுந்த வேதனைக்குரியவை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட ஆப்கான் படைகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடாமல் இருந்தமைக்கு பைடன் கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய பின்னர் முதன் முறையாகபெண்கள் சிலர் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தொழில், கல்வி மற்றும் அரசியல் பங்களிப்பு என்பன அனைத்து பெண்களினதும் உரிமை என தெரிவித்து, பெண்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்தும் நெருக்கடி நிலவுவதுடன், விமான நிலையத்திற்கு வருவோரை தலிபான்கள் திருப்பியனுப்புவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 150 இராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லக்கூடிய அமெரிக்க விமானப்படையினரின் C-17 விமானத்தில் 640 பேர் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளனர்.
தலிபான்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால், இவ்வாறு 640 பேர் பயணித்துள்ள நிழற்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகவும், தமது ஆட்சி மீது முழு நம்பிக்கை வைத்து பணிக்குத் திரும்புமாறும் தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெண் தொகுப்பாளர்கள் செய்தி வழங்கும் சேவை இன்று மீண்டும் ஔிபரப்பை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, தலிபான் போராளிகள் சிறுவர் பூங்காக்களில் தமது நேரத்தைக் கழிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.