மகாராஷ்டிரா பூனாவில் உள்ள ஒரு பாஜக தொண்டர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். கோயிலுக்கு உள்ளே பிரதமரின் மார்பளவு உருவச்சிலை உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிய பிரதமருக்கு தான் செலுத்தும் மரியாதை இந்த கோயில் என்று 37 வயதான மயூர் முண்டே என்ற அந்த நபர் கூறுகிறார். இந்த சிறிய கோவில் புனேவின் ஆந்த் பகுதியில் உள்ளது.
“பிரதமர் ஆன பிறகு, நரேந்திர மோடி (Narendra Modi) அவர்கள் பல வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. ராமர் கோவில் கட்டுமானம் துவங்கியது. முத்தலாக் நீக்கப்பட்டது. இப்படிப்பட்ட பல நீண்டகால பிரச்சனைகளை பிரதமர் மோடி அவர்கள் வெற்றிகரமாகக் கையாண்டார்” என்று ரியல் எஸ்டேட் முகவரான முண்டே கூறினார்.
“அயோத்தியில் ராமர் கோயிலைக் (Ram Temple) கட்டிய ஒருவருக்கு ஒரு சன்னதி இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆகையால் இந்த கோவிலை எனது சொந்த வளாகத்தில் கட்ட முடிவு செய்தேன்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பிரதமரின் மார்பளவு சிலை மற்றும் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்டன . இந்த கோயிலுக்கான மொத்த செலவு சுமார் 1.6 லட்சம் என்று அவர் கூறினார்.
இந்திய பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கவிதையும் மோடி உருவச்சிலைக்கு அருகில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.