ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக சுவிட்சர்லாந்து அதன் கதவுகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பல சுவிஸ் நகரங்கள் தங்கள் குரலைச் சேர்த்துள்ளன.
ஆப்கானிலுள்ள சுவிஸ் நாட்டவர்களை வெளியேற்றுவதில் கவனம் செலுத்துவதாகவும், ஆப்கானிஸ்தானில் சுவிஸ் திட்டங்களில் பணிபுரிந்த சுமார் 230 உள்ளூர்வாசிகள், அவர்களது உறவினர்களுடன் சேர்த்து இதன்போது வெளியேற்றப்படுவர் எனவும் புதன்கிழமை, அரசாங்க அமைச்சர்கள் தெரிவித்தனர்.
நீதியமைச்சர் கரின் கெல்லர்-சுட்டர் எதிர்காலத்தில் அதிக அகதிகளை ஏற்றுக்கொள்வதை நிராகரிக்கவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக சாதாரண புகலிட நடைமுறைகளை தளர்த்துவதற்கான உடனடி திட்டங்கள் இல்லை என்று கூறினார்.
இந்த கொள்கை ஏற்கனவே அகதி குழுக்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இப்போது ஜெனீவா, சூரிச், பெர்ன் நகரங்கள் அதன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
சுவிட்சர்லாந்து ஒதுங்கி நிற்க முடியாது. நாங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து நேரடியாக அதிகமான அகதிகளை உள்வாங்க வேண்டும் என்று ஜெனீவா நகரத் தலைவர் ஃப்ரெடெரிக் பெர்லர் சுவிஸ் பொது ஒலிபரப்பாளர் எஸ்ஆர்எஃப் இடம் கூறினார்.
நாங்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் செய்திகளைக் கேட்கிறோம், நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். பெடரல் கவுன்சில் செயல்பட வேண்டிய நேரம் இது என்று நாங்கள் நினைக்கிறோம், என்று சுவிஸ் தலைநகர் பெர்னின் மேயர் அலெக் வான் கிராஃபன்ரிட் கூறினார்.
இது குறிப்பாக சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான பாரம்பரியத்தை பராமரிப்பது பற்றியது என்று சூரிச் நகர கவுன்சிலர் ரபேல் கோல்டா கூறினார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், எட்டு சுவிஸ் நகரங்கள் செப்டம்பரில் லெஸ்போஸ் தீவில் உள்ள மோரியா முகாமில் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து கிரேக்கத்தில் இருந்து அகதிகளை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்தன. இந்த கோரிக்கை மத்திய குடியேற்ற அலுவலகத்தால் அந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய எதிர்பாராத வேகம், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் இருந்து புறப்படும் அகதிகளின் வெள்ளத்தை எப்படி எதிர்கொள்வது என்று பல நாடுகள் கவலையடைந்துள்ளன.
பிரித்தானியா 20,000 அகதிகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறுகிறது, அதே நேரத்தில் துருக்கி வழியாக நுழையக்கூடிய பெரும் எண்ணிக்கையிலான மக்களால் தாம் பாதிப்படையலாம் என்று கிரீஸ் அஞ்சுகிறது.