காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டு உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ள மக்களை ஐரோப்பாவுக்கு கொண்டு வருவதற்காக சுவிட்சர்லாந்து ஒரு விமானத்தை அனுப்புவதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விரும்பினால் மத்தியஸ்த சேவைகளையும் வழங்க பெர்ன் எதிர்பார்த்துள்ளது.
காபூலிலிருந்து கொண்டுவரப்பட்ட சுவிஸ் நாட்டவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏனையோரை ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்வதற்கான சுவிஸ் விமானம் இன்று சனிக்கிழமை தாஷ்கண்டிற்கு செல்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் எத்தனை பேரை விமானத்தில் ஏற்றிவரப் போவதாக இதுவரை குறிப்பிடப்படாத போதிலும், விமானத்தில் சுமார் 300 இருக்கைகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் உஸ்பெகிஸ்தானுக்கு சுவிட்சர்லாந்து வழங்கும் 1.3 மில்லியன் கொவிட் -19 முகக்கவசங்கள் எடுத்துச்செல்லப்படுவதோடு, அதில் மருத்துவ ஊழியர்களும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் சுவிட்சர்லாந்தின் ஒரு உறுதியான, சுமையைப் பகிர்ந்துகொள்ளும் பங்களிப்பாகும், சர்வதேச சமூகத்தின் காபூல் வெளியேற்ற முயற்சிகளில் சுவிசும் சேர்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக, 14 சுவிஸ் பிரஜைகள் சுவிட்சர்லாந்தை அடைய முடிந்தது, இதற்காக ஜெர்மனி மற்றும் அமெரிக்காவால் இயக்கப்படும் விமானங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். வெளியேற்றும் முயற்சிகளை ஒருங்கிணைக்க சுவிட்சர்லாந்து நேச நாடுகளுடன் நெருக்கமாக செயல்படுகிறது.
தனது உள்ளூர் பணியாளர்கள், சுவிஸ் குடிமக்கள் மற்றும் சுவிட்சர்லாந்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை காபூலிலிருந்து வெளியேற்றுவதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தூதரக விவகாரங்களுக்கு பொறுப்பான இஸ்லாமாபாத்தில் உள்ள சுவிஸ் தூதரகம், அங்குள்ள சுமார் 35 சுவிஸ் மக்களுடன் வழக்கமான தொடர்பை பராமரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.