காபூலுக்கான பாதுகாப்புப் பொறுப்பில் தற்போது இருக்கும் முன்னணி தலிபான் பிரமுகரான கலீல் உர்-ரஹ்மான் ஹக்கானி, இஸ்லாமிய எமிரேட்டின் கீழ் “அனைத்து ஆப்கானியர்களும்” பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற தலிபான் குழுவின் கூற்றுகளை வலியுறுத்தியுள்ளார். மேலும் நாட்டின் 34 மாகாணங்கள் முழுவதும் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞாயிற்றுக்கிழமை அல் ஜசீராவிடம் பேசியபோதே ஹக்கானி இவ்வாறு கூறினார்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீண்ட போரைக் கண்ட ஒரு தேசத்தின் ஒழுங்கையும் பாதுகாப்பையும் மீட்டெடுக்க தலிபான் செயல்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், வல்லரசுகளை நாம் தோற்கடிக்க முடிந்தால், நிச்சயமாக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார்.
தலிபானுடன் தொடர்புடைய மிகக் கொடூரமான மற்றும் வன்முறைக் குழுவாக அறியப்படும் ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர், 40 வருட யுத்தம் மற்றும் வன்முறைக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்குப் பாதுகாப்பைக் கொண்டுவருவாரா என்பதில் பல ஆப்கானியர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். குறிப்பாக வீடு வீடாக இடம்பெறும் தேடல்கள் மற்றும் தலிபான்கள் செய்ததாகக் கூறப்படும் வன்முறைகள் காபூலில் தொடர்ந்து பெருகி வருகின்றன.
ஹக்கானி இன்னும் சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்காவால் பெயரிடப்பட்டுள்ளார், பிப்ரவரி 2011 இல் அமெரிக்கா ஹக்கானியை பிடிக்க உதவுவோருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் ஐக்கிய நாடுகள் பயங்கரவாத பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார்.
காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள், அங்கு தலிபான்கள், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அமெரிக்க வீரர்கள் தீவிரமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வரும் கூட்டத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹக்கானியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையம் அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு வன்முறை, காயங்கள், நெரிசல்களால் நிகழ்ந்த இறப்புகள் என்று தினசரி செய்திகள் வெளியாகின்றன. இருப்பினும், மக்கள் தலிபான்களுக்கு பயப்படக்கூடாது என்று ஹக்கானி வலியுறுத்தினார்.
நம்மைப் பிரிக்க வெளியில் இருந்து வந்த ஒரு வல்லரசு இருந்தது. அவர்கள் எங்களிடம் போரை கட்டாயப்படுத்தினர். எங்களுக்கு யாருடனும் பகை இல்லை, நாங்கள் அனைவரும் ஆப்கானியர்கள் என்று அவர் கூறியுள்ளார்.