Home இந்தியா இலங்கை தமிழர்கள் அகதிகள் என அழைக்கப்பட கூடாது

இலங்கை தமிழர்கள் அகதிகள் என அழைக்கப்பட கூடாது

by Jey

இலங்கை தமிழர்கள் மீது தமிழகமும், தமிழக மக்களும் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்கும் அரசாங்கங்களும் இலங்கை வாழ் தமிழர்களுக்காவும், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்காகவும் பல நற்பணிகளை செய்து வருகின்றன.

தற்போது தமிழகத்தில் (Tamil Nadu) புதிதாக ஆட்சியை அமைத்திருக்கும் திமுக-வும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், நேற்று சட்டப்பேரவையில், இலங்கை தமிழர்களின் நன்மைக்காக ரூ.317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

இது குறித்து சட்டப்பேரவையில் (TN Assembly) முதல்வர் பேசுகையில், “இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என கூறாமல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைப்போம். இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்று கூறினார்.

இலங்கை தமிழர்களை அகதிகள் என்று கூறுவதால் அவர்களுக்கு ஏற்படும் மன வலியைப் புரிந்துகொண்டு, இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் துணையாக உள்ளார்கள் என்பதை முதல்வர் இதன் முலம் நிரூபித்துள்ளார்.

முன்னதாக, தமிழக பட்ஜெட் தொடரின்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் (M.K.Stalin), இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். மேலும், இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தப்படும் எனவும், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு இலவசமாக, எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் ரேஷன் கடையில் இலங்கை தமிழர்களுக்கு இலவசமாக அரிசி அளிக்கப்படும் என கூறினார். அத்துடன் இலங்கை தமிழரின் குழந்தைகள் கல்வி மேம்படுத்தும் வகையில் முதல் 50 மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

related posts