உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யத் தேவைப்படும் அன்னிய செலாவணியின் கையிருப்பு தனியார் வங்கிகளிடம் குறைந்துள்ளதால், இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சர்க்கரை, அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பதுக்கலைத் தடுக்க, அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவசரகால விதிமுறைகளைப் பிறப்பித்துள்ளார்.இதற்காக, மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை, ‘அத்தியாவசிய சேவைகளின் தலைமை ஆணையராக’ நியமித்துள்ளார்.
அவர், நெல், அரிசி, சர்க்கரை மற்றும் இதர நுகர்வோர் பொருட்களின் வினியோகத்தை ஒருங்கிணைப்பார்.சர்க்கரை, அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அவற்றைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.உணவுப் பதுக்கலைத் தடுப்பதற்கு அந்நாட்டு அரசு, கடுமையான அபராதங்களை விதித்து இருக்கிறது.ஆனால், கொரொனா பெருந்தொற்று காரணமாக, ஒவ்வொரு நாளும் 200 பேர் மரணம் அடையும் நிலையில், உணவுப் பற்றாக்குறை அங்கே தலைவிரித்து ஆடுகிறது.
இலங்கைப் பொருளாதாரம், 2020ல் 3.6 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல், அன்னிய செலாவணி கையிருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, அந்நாடு, வாகனங்கள் இறக்குமதி முதற்கொண்டு, சமையல் எண்ணெய், மஞ்சள் மற்றும் சமையலுக்குத் தேவைப்படும் பல பொருட்களின் இறக்குமதி வரை அனைத்தையும் தடை செய்துள்ளது.
ஆனாலும், அந்நாட்டு இறக்குமதியாளர்களால், உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் தருவிப்பதற்குத் தேவைப்படும் டாலர்களை திரட்ட முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், உள்ளூர் நாணயமான இலங்கை ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, இலங்கை மத்திய வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தியது.கடந்த 2019 நவ., மாதம், இலங்கையில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது.
அப்போது, 750 கோடி டாலராக இருந்த அன்னிய செலாவணி கையிருப்பு, இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில், வெறும் 280 கோடி டாலராக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், இலங்கை ரூபாயின் மதிப்பு 20 சதவீதம் குறைந்துபோய்விட்டது.இந்நிலையில், அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சரான உதயா கம்மன்பிலா, எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, வாகன ஓட்டிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.அதன்மூலம் சேமிக்கப்படும் அன்னிய செலாவணி, அத்தியாவசிய மருந்துகளையும், தடுப்பூசிகளையும் வாங்குவதற்குப் பயன்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். நுகர்வு குறையவில்லை என்றால், இந்த ஆண்டு இறுதிக்குள், கடுமையான எரிபொருள் பங்கீட்டைக் கொண்டுவர வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார், இலங்கை அதிபரது உதவியாளர் ஒருவர்.